திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையை ரத்துசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் உதயகுமாருக்கு திருமங்கலம் பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசல்காலம்பட்டி, சுவாமி மல்லம்பட்டி ஆகிய கிராமங் களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக அப்பகுதியில் சிறு தானியங்கள், பாரம்பரிய பயிர்கள் பயிரிடப்பட்ட பகுதிகளை தரிசு நிலம் எனக் கணக்கிட்டு 1,478.71 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த மூன்று கிராமங்களில் தனித்துவமான கரிசல் மண் இருப்பதால் சோளம், ராகி, தினை உள்ளிட்ட சிறு தானியங்கள் விளைச்சல் அதிகமாக நடந்தது. அதனால், சிப்காட்டுக்காக இப்பகுதி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு வருவாய்த் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆர்.பி.உதயகுமாரிடம் திருமங்கலம் பகுதி விவசாயிகள் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் உதயகுமார் முதல்வர் கே. பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்று இத்திட்டத்தை ரத்துசெய்ய தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக அமைச்சர் உதய குமாரை திருமங்கலம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.