கரோனா விழிப்புணர்வு மற்றும் விவசாயிகள் போராட்டத்தை மையமாக வைத்து தூத்துக்குடி ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து தனது வீட்டில் வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில். படம்: என்.ராஜேஷ் 
Regional03

விவசாயிகள் போராட்டத்தை சித்தரித்து கிறிஸ்துமஸ் குடில் தூத்துக்குடி ஓவிய ஆசிரியர் அசத்தல்

செய்திப்பிரிவு

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை மையமாக வைத்து ‘உழவனின் கைகளே உலகின் நம்பிக்கை' என்ற தலைப்பில் தூத்துக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் நி.இசிதோர் பர்னாந்து (56). இவர், தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில் அமைத்து, அதன் பின்னணியில் சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி ஓவியங்கள் வரைந்து வைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு சமாதானம், குடியுரிமை பிரச்சினை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகியவற்றை மையமாக வைத்து ‘அமைதியின் பயணம்' என்ற தலைப்பில் இவர் அமைத்திருந்த கிறிஸ்துமஸ் குடில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் சிறிய குடில் செட் அமைத்து, அன் பின்னணியில் கரோனா விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை சித்தரித்து ஓவியங்களை வரைந்துவைத்துள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு, கரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து வரும் உண்மையான நாயகர்களை ஒருபுறமும், மறுபுறம் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மையப்படுத்தியும் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் நாடாளுமன்றத்தையே புரட்டி போட்டது போலவும், அதனை பிரதமர் மோடி வியந்து பார்ப்பது போலவும், அனைத்து மதத்தினரும் விவசாயத்தை தூக்கிப் பிடிப்பது போலவும் இடம் பெற்றுள்ள இந்த ஓவியங்களுடன் கூடிய கிறிஸ்துமஸ் குடிலை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT