திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

நெல்லை, தென்காசி மாவட்ட கோயில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மற்றும் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

நெல்லையப்பர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. வரும் 24-ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக சுவாமி கோயிலில் 2-ம் பிரகாரத்தில் பெரிய சபாபதி சந்நிதி முன் இன்று (22-ம் தேதி) தொடங்கி வரும் 30-ம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. வரும் 29-ம் தேதி சுவாமி கோயிலில் 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ்வாய்ந்த தாமிர சபையில்  நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறும். வரும் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிரசபையில் பசு தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 3.30 மணி முதல் 4.30 மணிவரை  நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சா.ராமராஜா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அழகியகூத்தர் திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். வரும் 27-ம் தேதி காலையில் அழகியகூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். வரும் 30-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் தொடங்குகிறது. காலை 5 மணிக்கு கோபூஜை மற்றும் ஆருத்ரா தரிசனமும், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனையும் நடைபெறுகிறது.

குற்றாலம்

சங்கரன்கோவில்

SCROLL FOR NEXT