Regional02

மகாராஷ்டிராவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலுக்காக, மகாராஷ்டிராவில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 683 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் உள்ளன.

தற்போது மகாராஷ்டிரா மாநிலம், சத்தாரா பகுதியிலிருந்து புதிதாக 830 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 470 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 560 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் வந்துள்ளன. ஒவ்வோர் இயந்திரத்திலும் உள்ள பார்கோடை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்கேன் செய்து பாதுகாப்பாக வைக்கப்படும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பெல் நிறுவனத்தின்அலுவலர்கள் மூலம் விரைவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். உதவிஆட்சியர் (உதகை) மோனிகா ராணா,வட்டாட்சியர் குப்புராஜ், தேர்தல் தனி வட்டாட்சியர் மகேந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT