மானாமதுரை அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லாததால் அமைச்சர், ஆட்சியரை வழிமறித்து திமுக ஒன்றியக் குழுத் தலைவர், கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. கிளினிக்கை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால், இந்த விழாவுக்கு மானாமதுரை திமுக ஒன்றியக் குழுத் தலைவர் லதா அண்ணாதுரையை அதிகாரிகள் அழைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவரும், திமுக கவுன்சிலர்களும் விழா முடிந்து புறப்பட்ட அமைச்சரை வழிமறித்தனர்.
தொடர்ந்து அவர்கள் ‘இது அரசு விழாவா, இல்லை கட்சி விழாவா,’ என்று கேட்டனர். இதைக் கண்டு கொள்ளாமல் அமைச்சர் காரில் ஏறிச் சென்றார். அவரைத் தொடர்ந்து வந்த ஆட்சியர் மதுசூதனையும் வழிமறித்து கேள்வி எழுப்பினர். அவர் அலுவலகத்துக்கு வாங்க பேசிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார். இதைக் கண்டித்து திமுகவினர் கோஷமிட்டனர்.
ஒன்றியக் குழுத் தலைவர் லதா அண்ணாதுரை கூறும்போது, ‘‘எந்த விழாவுக்கும் என்னை அழைப்பதில்லை. ஆட்சியரிடம் கேட்டாலும் கண்டு கொள்ளாமல் செல்கிறார்" என்றார்.