Regional02

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநரும், தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவருமான எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ரூ.904 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 விதமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் நீரேற்று நிலையம் அமைத்தல், பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம் மேம்பாடு, கீழவாசல் சரபோஜி மார்க்கெட், காமராஜ் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் புதிதாக கட்டுதல், குப்பையை தரம் பிரித்து உரம் தயாரித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, அகழியை மேம்படுத்தி படகு விடுதல், மணிக்கூண்டு சீரமைத்தல், அய்யங்குளம், சாமந்தாங்குளம், சிவகங்கை பூங்கா நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தமிழக பேரூராட்சி இயக்குநரும், தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவருமான பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், நகராட்சி பொறியாளர் ஜெகதீசன், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழைய பேருந்து நிலையம் மேம்பாடு பணி உட்பட அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் தரம் குறித்து கண்காணிக்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

SCROLL FOR NEXT