திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 142.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,033 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 3,316 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 145 அடியாகவும், 49 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு நீர்மட்டம் 26 அடியாகவும், 22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 110.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,758 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதி களிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 8, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 4, அம்பாசமுத்திரம்- 0.50, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 1.
தென்காசி
கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், இந்த அணை களுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி இந்த அணை நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கருப்பா நதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக வும் இருந்தது.
குற்றாலத்தில் குதூகலம்
இந்நிலையில், தொடர் மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 2 நாட்களாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து பிரதான அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.