சுந்தர்ராஜ் 
Regional01

கரோனாவால் வேலையிழந்து தவித்த சிவகங்கை இளைஞர் புருனை நாட்டில் மீட்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், கன்னமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (38), புருனை நாட்டுக்குக் கட்டுமான வேலைக்குச் சென்றார். ஓட்டுநர் வேலையும் தெரிந்திருந்ததால், அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியமர்த்தப் பட்டார். இந்நிலையில், கரோனா தாக்கத்தால் வேலையிழந்த சுந்தர்ராஜ், அன்றாட வாழ்க்கையை நடத்த வழியின்றி தவித்து வந்தார். திடீரென்று அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. கரோனா காலம் என்பதால் அங்கு சிகிச்சை பெற முடியவில்லை. இவர் பணிபுரிந்த நிறுவனமும் உதவவில்லை.

சொந்த ஊர் திரும்பவும், சிகிச்சைக்கும் பணம் இன்றி சுந்தர்ராஜ் தவித்தார். அவரை ஊருக்கு அழைத்து வர உதவ வேண்டும் என குடும்பத்தினர் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசனிடம் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்குமாரிடம் தெரிவித்ததன் பேரில், இந்திய தூதரகம் மற்றும் சர்வதேச தொழிற்சங்க நிர்வாகிகளை தொடர்புகொண்டு பொன்குமார் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து, புருனை நாட்டின் இந்திய தூதரகம், சுந்தர்ராஜை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. புருனை நாட்டில் இருந்து கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் மதுரை வழியாக சிவகங்கை அழைத்து வரப்பட்டார்.

இளைஞரை மீட்க உதவிய தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் சங்க நிர்வா கிகளுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT