Regional01

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யக் கோரி முதல்வரிடம் கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களை பணி நியமனம் செய்யக் கோரி சேலம் வந்த முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அரசு விழா மற்று தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமி சேலம் வந்துள்ளார். நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் வீட்டின் முன்பு நேற்று காலை பணி நியமனம் வேண்டி கோரிக்கை அட்டைகளுடன் ஆசிரியர் தகுதித் தே்ரவில் தேர்ச்சி பெற்றவர்கள் நீண்ட வரிசையில் திரளாக காத்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 5 பேர் மட்டும் முதல்வரிடம் சென்று, கோரிக்கை மனுவை அளிக்க அனுமதியளித்தனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். முதல்வரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 90 முதல் 110 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் பெறும் நேரத்தில், தவறான வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை ஆசிரியர்கள் இழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு வெயிட்டேஜ் முறையை அரசு ரத்து செய்தது. ஆனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. எனவே, முதல்வர் பணி நியமனம் வழங்கி ஆசிரியர்களின் வாழ்வை காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.பணி நியமனம் வழங்க வலியுறுத்தி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லம் அருகே சாலையின் இருபுறமும் கோரிக்கை அட்டைகளுடன் காத்திருந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். படம்: எஸ். குரு பிரசாத்

SCROLL FOR NEXT