Regional02

டிச.24-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் டிச.24-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் டிசம்பர் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.24-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆட்சியர் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றில் விவசாயம் தொடர்புடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் பங்கேற்க வசதியாக, தஞ்சாவூர், பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூ ரணி, திருவோணம், கும்பகோணம், அம்மாபேட்டை மற்றும் திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும், திருவையாறு, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவிடை மருதூர் மற்றும் பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அலுவலகங்களுக்கு விவசாயிகள் அரைமணி நேரத்துக்கு முன்னதாகச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT