TNadu

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் 223 ஏக்கர் இடம் ஒப்படைப்பு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 223 ஏக்கர் இடம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மதுரை தோப்பூரில் 2018-ல் இடம்தேர்வு செய்யப்பட்டது. இங்கு கட்டுமானப் பணியை விரைவில் தொடங்கக் கோரி வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதில் இருந்து 45 மாதத்தில் எய்ம்ஸ்மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை தோப்பூரில் சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணியும் நடைபெறவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை விரைவில் தொடங்கவும், முடிக்கவும், அதற்குப் போதுமான நிதி ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 223 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தகவல் உரிமைச் சட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்இடம் முழுமையாக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. தகவல் அறியும்உரிமைச் சட்டத்தில் தவறான தகவல் அளித்த அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழக அரசு முழுமையாக இடத்தை ஒப்படைத்துவிட்டதா? என்றனர்.

அதற்கு உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கெளரி, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்துவிட்டது. தற்போது எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தப் பணி 2021 மார்ச் 31-ல்முடிவடையும். அன்று முதல் 45 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், ‘‘தமிழகத்துடன் வேறு சில மாநிலங் களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை? ஜப்பானிய நிறுவனம் கரோனா காலத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்குவது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்றுகூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT