Regional01

அரசு பள்ளி அருகே செயல்படும் மதுபானக் கடையை மாற்ற உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை - சென்னை சாலையில் உத்தங்குடி வழிவிடும் பாண்டிகோயிலில் இருந்து 45 அடி தூரத்தில் மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம் செயல்படுகிறது. இந்த மதுபானக் கடை அரசுக்குச் சொந்தமானதா? தனியாருக்குச் சொந்தமானதா? என்ற தகவல் பலகை எதுவும் அங்கு வைக்கப்படவில்லை. அதன் அருகே தனியார் மருத்துவமனை, சுகாதாரப் பணியாளர் அலுவலகம் செயல்படுகிறது. மதுபானக் கூடத்துக்காக சம்பக்குளம் உத்தங்குடி நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இந்த மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், விதிகளை மீறி கோயில், மருத்துவமனை அருகே மதுபானக் கடை செயல்படுகிறது. குறிப்பாக ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதனால் பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

இதையடுத்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தங்குடி மதுபானக் கடை தொடர்பாக அதிகாரிகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT