சேலம் பனமரத்துப்பட்டி அருகே ஏர்வாடி வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.. விழாவுக்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். மினி கிளினிக்கை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. தமிழக மக்கள் தான் அவர்களுக்கு வாரிசு. இவ்விரு தலைவர்களின் திட்டங்கள் உயிரோட்டமிக்கவை. அந்தவகையில், தற்போது, ஏழை, எளிய மக்கள் தரமான உயரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 4,63,500 மக்கள் பயன் அடைவர். நகர்ப்புற, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கொண்டு, காணொலி மூலம் அதிமுக அரசை விமர்சிப்பது பெரிதா? நாங்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து வருவது பெரிதா? நான் மட்டுமல்லாமல் எம்பி, எம்எல்ஏ-க்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அதிமுக அரசு என்றைக்கும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மக்களுடைய வாழ்வு உயர எங்களுடைய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தமிழ்நாடு அரசு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் மனோன்மணி, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக மருத்துவ இடங்கள்
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் மினி கிளினிக் தொடங்கியுள்ளதால், பலரும் பயன் அடைவர். என்னுடைய சிறு வயதில், உடல் நிலை சரியில்லாதபோது, 14 கி.மீ. தொலைவிலுள்ள எடப்பாடி அல்லது 24 கி.மீ. தொலைவிலுள்ள பவானியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நான் பட்ட கஷ்டத்தை, தமிழகத்தில் எவரும் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் மாநிலம் முழுவதும் மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது.
நானும் அரசுப் பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில், கடந்தாண்டில் வெறும் 6 பேருக்குதான் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்து, நிறைவேற்றினேன். இதனால், 313 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. பல் மருத்துவக் கல்லூரியில் 87 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
2020-21-ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் அதில் 1650 இடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும். அதிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டில், அடுத்த ஆண்டு சுமார் 435 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
நான் முதல்வராக என்னை எப்போதும் நினைத்ததுகூட கிடையாது. இந்தப் பதவியின் மூலம் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறேன். நீங்கள் கொடுத்த இப்பணியை சிறப்பாக செய்து, நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.