பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அரும் பாவூர் பெரிய ஏரி, அரும்பாவூர் சித்தேரி, உட்பட வடக்கலூர், பெண்ணகோணம், வயலூர், கீழப்பெரம்பலூர், பூலாம்பாடி, அகரம் சீகூர் உள்ளிட்ட கிராமங் களில் உள்ள 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
எழுமூர், ஆய்க்குடி, நூத்தப்பூர், பேரையூர் மற்றும் நெற்குணம் ஏரிகள் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. அதேசமயம் வரத்து வாய்க்கால்கள் போதிய அளவுக்கு தூர் வாரப்படாததால் மழைநீர் ஏரிகளுக்கு செல்ல இயலாமல் எசணை, வெங்கலம், செங்குணம், காரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகளில் தண்ணீர் இருப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
விசுவகுடி நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவான 33 அடியில் 31 அடி அளவுக்கு நேற்றுவரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் என வருவாய்த் துறையினர் அம்மாபாளையம், விசுவகுடி, முகமதுபட்டிணம் உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர்.