திருவோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், ‘புரெவி' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட நிலக்கடலை பயிர் பாதிப்புகள் குறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.
நிகழாண்டு, நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 300 ஏக்கரில் மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ‘புரெவி’ புயல் காரணமாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், திருவோணம் ஒன்றியத்தில் சிவவிடுதி, காடு வெட்டிவிடுதி, தோப்புவிடுதி ஆகிய ஊராட்சிகளில் நிலக்கடலை பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆட்சியர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடம் கடலைப் பயிர் சாகுபடி பரப்பளவு, முளைப்புத் திறன் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர், நிலக்கடலை பயிர்களின் சேத மதிப்பை களஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும்படி, வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொல்லாங்குளம் ஏரியை பார்வையிட்ட ஆட்சியரிடம், முழுமையாக தண்ணீர் நிரம்பியுள்ள கொல்லாங்குளம் ஏரிக்கு வடிகால் வசதி, பாசன வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
ஆய்வின்போது, வேளாண் மைத் துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின், துணை இயக்குநர் (மாநில திட்டம்) கோமதிதங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.