திருச்செந்தூர் கடலில் புனித நீராட 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையோரம் அமைந்திருப்பது திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில். சிறந்த குரு பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலின் முக்கிய வழிபாடுகளில், இங்குள்ள கடலிலும், கடலுக்கு அருகேயுள்ள நாழிக்கிணற்றிலும் புனித நீராடி,சுவாமியை தரிசிப்பது முக்கியமானது. இதற்காக மாதாமாதம் திருச்செந்தூர் வருபவர்கள் ஏராளம்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் இக்கோயிலில் தரிசனத்துக்கும், கடற்கரை பகுதிக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கில் தளர்வு காரணமாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடலில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், ஆண்டுதோறும் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறும் சூரசம்ஹாரம், நடப்பாண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையாக நடைபெற்றது.
இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூர் கடற்கரைக்கு பக்தர்கள் செல்லவும், புனித நீராடவும்நேற்று மதியம் 12 மணியளவில் அனுமதி அளிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்ததும் கோயிலில் இருந்த பக்தர்கள் உற்சாகமடைந்தனர். சிறிது நேரத்திலேயே ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து, புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.