சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் டீன் பாலாஜிநாதன் உள்ளிட்டோர். 
TNadu

15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், தொற்றால் பாதிப்பவர் எண்ணிக்கை 1,100 என்ற அளவில் உள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று உயிரிழப்பு விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 சதவீதமாக உள்ளது. இதனை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விடுதிகள், கேண்டீன்கள், தங்கும் விடுதிகள், மெஸ்களில் மாணவ, மாணவியர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

மூடிய அறையில் 20-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்றும் முகக்கவசம் அணிவதை கைவிடக்கூடாது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சென்னை ஐஐடி-யில் மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 2 பிளாக்கில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை செய்யப்படும். அதனால், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. பல கல்லூரிகளில் வீட்டில் இருந்தே ஆன்-லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. அதனை மாணவர்கள் பின்பற்றலாம் என்றார்.

SCROLL FOR NEXT