Regional01

மருதையாற்று வெள்ளத்தால் கொட்டரை - ஆதனூர் இடையே தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் மருதையாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை-ஆதனூர் வழித்தடத்தில் உள்ள தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், கொட்டரை கிராமத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆதனூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலைவரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பெரம்பலூர் 62, லப்பைக்குடிகாடு 60, அகரம் சீகூர் 56, புதுவேட்டக்குடி 48, வேப்பந்தட்டை 46. கிருஷ்ணாபுரம், தழுதாளை 42, எறையூர் 36, வி.களத்தூர் 30, செட்டிக்குளம் 28, பாடாலூர் 21.

கரூர் மாவட்டத்தில் கரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று லேசாக பரவலான மழை பெய்தது. மழையால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): கரூர் 8.20, கடவூர், பாலவிடுதி தலா 6, பஞ்சப்பட்டி, மைலம்பட்டி தலா 5, கிருஷ்ணராயபுரம் 3.40, குளித்தலை, மாயனூர், க.பரமத்தி தலா 3, அணைப்பாளையம் 2.20.

SCROLL FOR NEXT