டெல்டாவில் புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவற்றின் சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் ஜி.பொய்யாமணி தலைமை வகித்தார். மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கண்ணன் வரவேற்றார். கமல் நற்பணி இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தரும.சரவணன், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் மா.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
மக்கள் நீதி மய்ய மாநகரச் செயலாளர்கள் ஜி.சுந்தரமோகன், எம்.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் எம்.பி.கலையரசன் உள்ளிட்டோர், சேமடைந்த நெற்கதிர்களை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேபோல, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று பேரணியாகச் சென்றனர். மாவட்டத் தலைவர் ரஹமத்அலி தலைமையில், மாநில விவசாய பிரிவுச் செயலாளர் முன்னிலையில் சென்ற அவர்களை, ஆடுதுறை கடைவீதியில் போலீஸார் தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.