தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் கடலோர பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸார் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோவில் இருந்து சிலர் சாக்கு மூட்டைகளை படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
சரக்கு ஆட்டோ டிரைவர் தாளமுத்துநகர் பகுதியைச் சேரந்த அன்புராஜ் (34) என்பவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினார்.
சரக்கு ஆட்டோ மற்றும் படகை போலீஸார் சோதனை செய்த போது அதில் மூட்டைகளில் 2,000 கிலோ மஞ்சள் இருந்தது. படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்த முயன்றது தெரிய வந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட அன்புராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.