டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயி களுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடியில் நேற்று ஏர் கலப்பை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காங்கிரஸ் கட்சியினர் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலையில் திரண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அதே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். மாநகர துணைத் தலைவர் பிரபாகரன், மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, சேகர், ஐசன்சில்வா, ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், அருள், சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 45 பெண்கள் உட்பட 118 பேரை போலீஸார் கைது செய்தனர்.