திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், மாவட்ட பதிவாளர் அலுவலகம், எண்-1 மற்றும் எண் 2, இணைப் பதிவாளர் அலுவலகங்கள், தொட்டிபாளையம் சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை இயங்குகின்றன.
பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பணம்செலுத்தப்படுகிறது. ஆன்லைனில் ஏற்கெனவே வரவு வைக்கப்பட்ட தொகைக்கான ரசீதை தொழில்நுட்ப உதவியுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அழித்துவிட்டு, புதிய தொகையை செலுத்துவதற்கு அதே ரசீதை பயன்படுத்தி அரசுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மண்டல பதிவுத் துறை தலைவர் ஜெகதீசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அலுவலகத்தில் உள்ள கணினியில் ஏற்கெனவே பதிவாகியுள்ள ரசீதை அழித்துவிட்டு, மீண்டும் புதிதாக ரசீது வழங்கியதுபோல முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக மண்டல பதிவுத் துறை தலைவர் ஜெகதீசன் கூறும்போது, "எவ்வளவு ரசீதுகளை அழித்து எவ்வளவு தொகை மோசடி செய்தார்கள், அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இதற்காக கணினியில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
முதல்கட்ட விசாரணையில், இந்த முறைகேடு தொடர்பாக இணைப் பதிவாளர் விஜயசாந்தி (எண்.1), இணைப் பதிவாளர் முத்துக்கண்ணன் (எண்.2), தொட்டிபாளையம் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் பன்னீர்செல்வம், இணைப் பதிவாளர் அலுவலகம் (எண்.1) உதவியாளர் சங்கர், இணைப் பதிவாளர் அலுவலகம் (எண்.2) இளநிலை உதவியாளர் மோனிஷா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸிலும் புகார் அளிக்கப்பட உள்ளது" என்றார்.