Regional02

கொடுத்து வைத்திருந்த பணத்தில் ரூ.44 லட்சம் அபகரிப்பா? உசிலம்பட்டி தம்பதி மருத்துவமனையில் அனுமதி அதிமுக எம்எல்ஏ தாக்கியதாக புகார்

செய்திப்பிரிவு

உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ கொடுத்து வைத்த பணத்தில் ரூ.44 லட்சத்தை அபகரித்ததாகக் கூறி கணவன், மனைவி தாக்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ நீதிபதி. அதே ஊரைச் சேர்ந்த முருகன்(38) எம்எல்ஏ-வுக்கு நெருக்கமானவராக இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் நீதிபதி எம்எல்ஏ வீட்டுக்குச் சென்ற முருகன் அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது தந்தை ராமர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில், தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்த நிலையில், முருகன் அடுத்த நாள் (நேற்று முன்தினம்) திடீரென உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்துக்கு தனது வழக்கறிஞருடன் சென்றார். எம்எல்ஏக்கு சேரவேண்டிய பணத்தை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தபோது, அதைத் திருடியதாக தன்னையும், மனைவி சுகந்தியையும் எம்எல்ஏ தரப்பினர் அடித்துத் துன்புறுத்தியதாக போலீஸாரிடம் முருகன் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘எம்எல்ஏவுக்கு நெருக்கமாக இருந்த முருகனிடம் எம்எம்ஏவுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் அடிக்கடி வந்து பணம், நகைகள் கொடுத்து வைத்திருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் கொடுத்து வைத்திருந்த சுமார் ரூ. 2 கோடியில் ரூ.44 லட்சத்தை காணவில்லை என்றும் அதை முருகன் திருடியிருக்கலாம் என எம்எல்ஏ தரப்பில் வீட்டுக்கு அழைத்து கணக்குக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது எம்எல்ஏ தரப்பு தாக்கியதாகக் கூறி முருகன், அவரது மனைவி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தகவல்களைப் பெற்று விசாரிக்கிறோம் என்றனர்.

இது குறித்து நீதிபதி எம்எல்ஏவிடம் கேட்டபோது, திமுக, அமமுகவினர் தூண்டிவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே தவறாகப் புகார் அளிக்கப்படுகிறது.

தவறான புகார் என்பதால் அது பற்றி நான் ஏன் பதிலளிக்க வேண்டும். அதனால், நான் கண்டுகொள்ளவில்லை என்றார்.

SCROLL FOR NEXT