மத்தூர் அருகே வீடு தீப்பிடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார்கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(80). இவரது கணவர் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். தனியாக வசித்து வந்த கோவிந்தம்மாள் கூலி வேலைக்குச் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டிருந்தார்.
இந்நிலையில் இரவில் மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததில் வீடு தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கோவிந்தம்மாளை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை. இதுதொடர்பாக அங்கிருந்த வர்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். வீட்டில் உடல் கருகிய நிலையில் கோவிந்தம்மாள் இறந்து கிடந்தார். அவரது உடலை மத்தூர் போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.