திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாவா தர்கா உள்ளது . காசி விஸ்வநாதர் கோயில் அருகேதான் 1967 வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. பின்னர் இரு பிரிவினரிடையே பிரச்சினையால் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அனுமதித்தாலும், சட்டம் -ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற போலீஸார் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம் எரிந்தது. மலைப்பாதையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்து, தடையை மீறி தீபம் ஏற்றியதாக வில்லாபுரத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் செல்வகுமார், கீரைத்துரை அரசு பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.