தூத்துக்குடியில் சுகாதாரத் துறைமூலம் ‘காசநோய் இல்லா தமிழகம்-2025’ இயக்கத்தின் சார்பில் காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கூடுதல்ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
இந்த எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் 24.12.2020 வரை நடைபெறவுள்ளது. இந்த வாகனம் 16-ம் தேதி மாதவநாயர் காலனி, 17-ம் தேதி கீழஈரால் ஊராட்சி தோணுகால், 18-ம் தேதிபுளியங்குளம், 19-ம் தேதி நாகலாபுரம் ஊராட்சி தாப்பாத்தி, 21-ம் தேதி கடம்பூர் பேரூராட்சி நடராஜபுரம், ஜோதிநகர், 22-ம் தேதி பேரிலோவன்பட்டி ஊராட்சி சுந்தரலிங்கம் காலனி, 23-ம் தேதி ஏரல் பேரூராட்சி திருப்புளியங்குடி, 24-ம் தேதி மெஞ்ஞானபுரம் ஊராட்சி தேரியூர் ஆகிய 10 இடங்களுக்கு சென்று காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்படும்.
மத்திய அரசின் டிபி இல்லாத-2025 என்ற இலக்கை அடையும்பொருட்டு மருத்துவ நிலையங்களுக்கு வராத மற்றும் வர இயலாதவரையும் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று டிபி பரிசோதனை செய்திடும் வகையில் தமிழக அரசால் இந்த அதிநவீனஎக்ஸ்ரே வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடு தேடிவரும் சுகாதார ஊழியர்களிடம் டிபி நோயின் அறிகுறிகளான 2 வார இருமல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல் ஆகிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் கூட அதனை தெரியப்படுத்தி டிபியிலிருந்து முழு நிவாரணம் பெற்று, டிபி நோய் இல்லாத தூத்துக்குடியை உரு வாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.