தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சூசகமாகத் தெரிவித்தார்.
2021 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முதல் கட்டப் பிரச்சாரத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கட்சி தொடங்கினோம். மதுரையில் இருந்தே சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். சில இடங்களில் பிரச்சாரத்துக்குப் போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் தடை என்பது புதிதல்ல. திட்டமிட்டபடி மக்களைச் சந்திப்போம். சட்டத்துக்குட்பட்டு பிரச்சாரம் செய்வோம். எங்களது பிரச்சாரம் யாருக்கு உறுத்தலாக இருக்கிறதோ அவர்கள்தான் தடையை ஏற்படுத்துகின்றனர். இதையும் மீறி பிரச்சாரம் தொடரும்.
ரஜினியின் ஆன்மிக அரசியலும், மக்கள் நீதி மய்யமும் ஒன்று சேருமா என்பது பற்றி இப்போது கூற இயலாது. கடைசி நேரத்தில் கட்சிகள், காட்சிகள் மாறும், புது அணி (மூன்றாவது அணி) உருவாகும். இதற்குச் சற்று தாமதம் ஏற்படலாம்.
ரூ.1000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் யாருக்காக என்ற கேள்வியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன். இப்பதிவை பிரதமருக்கே நேரடியாக ட்விட்டரில் பதிவிடுவேன் என்றார். கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்தோஷ் பாபு, மகேந்திரன், கவிஞர் சினேகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை நகரில் பைக்காரா, தெற்குவாசல், மேலமாசி வீதி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால், போலீஸார் அனுமதி மறுத்ததால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து கை அசைத்துச் சென்றார்.
முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரச்சாரத்தில் புதிய, நல்ல, சீரமைத்த தமிழகத்தைப் பற்றி முன்னிலைப்படுத்துவோம். சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மக்களுக்கே தெரியும். அதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதில் உபயோகம் இல்லை. இனி செய்ய வேண்டியதை பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் என்றார்.