எல்ஐசி நிர்வாகத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என மதுரைக் கோட்ட காப்பீட்டு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 64-வது மாநாடு நடைபெற்றது. கோட்டத் துணைத்தலைவர் நா.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தென் மண்டலப் பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார் பேசினார்.
எல்ஐசி நிர்வாகத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். ஏழை, எளிய குடும்பத் தினருக்கு கரோனா ஊரடங்கு நிவாரணமாக ரூ.7,500-ஐ மத்திய அரசு வழங்க வேண்டும். எல்ஐசி பங்குகளை விற்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் பிற சேவை மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோட்டப் பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியம், பொதுக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கக் கோட்டத் தலைவர் புஷ்பராஜ், பொதுச்செயலாளர் வி.ரமேஷ், இணைப் பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐ டியூ மாவட்டச் செயலாளர் ரா.தெய்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.