மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநில சட்டச் செயலாளர் கே.அனந்தராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் நாகசுப்பிரமணியன், தென்மண்டலத் தலைவர் திருஞானம், மாவட்ட துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், கள்ளர் பள்ளி தலைவர் சின்னபாண்டி, நிர்வாகி குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாணவர்களிடையே நிலவும் குழப்பத்தைப் போக்கும் வகையில் பள்ளி திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத்தேர்வுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.கந்தசாமி, செயலாளராக ஏ.கார்மேகம், பொருளாளராக டி.ரமேஷ், அமைப்பு செயலாளராக பி.குமரேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.