பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு கன்டெய்னர் லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் கருப்பூர் போலீஸார் நேற்று அதிகாலை கருப்பூர் சுங்கச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை வழிமறித்து போலீஸார் சோதனை செய்தனர்.
லாரியில் 20 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்த போலீஸார் ஆத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் மனோகரை (40) கைது செய்தனர்.
விசாரணையில், பெங்களூருவில் இருந்து ஆத்தூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சமாகும்.