மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், கீழ வெளி வீதியிலுள்ள 50-வது வார்டு வரிவசூல் மையத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணிபுரிகிறார். இதே வார்டை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் முருகன், கடந்த ஒரு மாதத்துக்கு முன் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, கடந்த 4-ம் தேதி மதுரை வந்த தமிழக முதல்வரிடம் புகார் மனு அளிக்க அப்பெண் முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் அப்பெண் அளித்த புகார் தொடர்பாக துணை ஆணையர் விசாரணை நடத்தினார். அப்போது, இதேபோல் மேலும் சில பெண் ஊழியர்களுக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னை எதிர்த்த ஒப்பந்தப் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் முருகன் மீது விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.