தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 59,729 ஹெக்டேரில் கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்றசிறுதானியப் பயிர்கள், 64,498 ஹெக்டேரில் உளுந்து, பாசிப்பயறு போன்றபயறுவகைப் பயிர்கள், 1,894 ஹெக்டேரில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய்வித்துப் பயிர்கள், 3,822 ஹெக்டேரில் பருத்தி என மொத்தம் 1,29,943 ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தின்போது தொடக்கத்தில் குறைந்த மழைப்பொழிவு இருந்தாலும் தற்போது பலத்தமழை பெய்துள்ளது. இக்கால கட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்வது மிகமிக அவசியம். உளுந்து, பாசிப்பயறு போன்ற குறுகிய காலப் பயிர்கள் 65- 70 நாட்களில் முதிர்ச்சி அடைபவை.
எனவே, தொடர் மழை காரணமாக மகசூல் இழப்பை ஈடு செய்ய உளுந்து,பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உடனடியாக பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். இப்பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய ஏக்கருக்கு கட்டணம் ரூ. 192 மட்டுமே. காப்பீடு செய்ய இம்மாதம் 16-ம் தேதி கடைசி நாள்.
மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்ய இம்மாதம் 21-ம் தேதிகடைசி நாள். எனவே, விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.199 மட்டும் செலுத்தி மக்காச்சோளப் பயிரையும் விரைந்துகாப்பீடு செய்ய வேண்டும். காப்பீடுசெய்வதற்கான காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.