சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் டிச.11-ல் தொடங்கியது. வழக்கில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்தி ரிகை நகல் காவல் ஆய்வாளர் தர் உட்பட 9 பேருக்கும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வடிவேலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தரின் வழக்கறிஞர் வாதிடுகையில், சிறையில் உள்ள தர் உள்ளிட்டோரை ஒரு நாள்தான் சந்தித்து பேச முடிந்தது. இதனால் வழக்கு தொடர்பாக போதுமான விவரங்களை அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை. போதுமான விவரங்கள் இல்லாமல் விசாரணையைத்தொடங்குவது சரியாக இருக்காது. எனவே காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதையேற்க மறுத்து, இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே குற்றவாளிகள் தரப்புக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கு உரிய நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்படும். குற்றவாளிகள் தரப்புக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக தர் உட்பட 9 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தர், தனக்கு சிறையில் சிறப்பு வகுப்பு வழங்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வும் தர் தெரிவித்தார். அதற்குநீதிபதி மனுவைப் பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விசாரணை டிச.21-க்கு தள்ளிவைக்கப்பட்டது.