அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழாக்குழுவினர் வட்டாட்சியரிடம் கடிதம் அளித்தனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட சில ஊர்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். தற்போது கரோனா பரவலால் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் எதற்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுத் தலைவர் சுந்தர்ராஜ், துணைத் தலைவர் பாலாஜி மற்றும் கிராமத்தினர் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இது குறித்து விழாக் குழுவினர் கூறுகையில், “கரோனா விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வட்டாட்சியரிடம் மனு அளித்த பின்ஆட்சியரைச் சந்திக்கவிருக்கிறோம். போட்டி உறுதியாக நடத்தப்படும் கரோனா காரணமாக அதிகாரிகள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்” என்றனர்.