Regional02

அவிநாசி, ஊத்துக்குளியில் பெண்களிடம் நகை பறிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே எஸ்.பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் மனைவி பழனியம்மாள் (65). இவர், நேற்று முன்தினம் மாலை சுக்ரீஸ்வரர் கோயில் அருகே தங்களது விளைநிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை அவிழ்த்துக் கொண்டு, வீடு நோக்கி எஸ்.பெரியபாளையம் பிரதான சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பழனியம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக பழனியம்மாள் அளித்த புகாரின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இதேபோல, திருப்பூர் கணக்கம்பாளையம் கே.என்.நகரை சேர்ந்தவர் பி.ஈஸ்வரி (36). இவர், நேற்று முன்தினம் பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திருப்பூர் சாலை சந்திப்பு அணுகு சாலையில் சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்தபுகாரின்பேரில் அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, "இவ்விரு சம்பவங்களும் அடுத்தடுத்து ஓரிரு மணி நேர இடைவெளிக்குள் நடைபெற்றுள்ளன. இதனால், ஒரே கும்பல் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டு இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இல்லாததால், அடுத்தடுத்த இடங்களில் இருந்து கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து வாகன ஒப்பீடு உள்ளிட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

SCROLL FOR NEXT