ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 9 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியில் நேற்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சிறப்பு பயிற்சி பெறும் (எலைட்) அரசுப் பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆட்சியர் கூறியதாவது: அரசு உள் ஒதுக்கீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர் மருத்துவப் படிப்புக்கும், 4 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்புக்கும் என 9 பேர் பயன் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நடப்புக் கல்வி யாண்டில் சிறப்பு பயிற்சி (எலைட்) வகுப்பில் மொத்தம் 36 அரசு பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு விடுதி வசதி, கல்வி உபகரணங்கள், மாதிரித் தேர்வுகள், நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ. முத்துச்சாமி (ராமநாதபுரம்), மு.முருகம்மாள் (மண்டபம்), எஸ்.கருணாநிதி (பரமக்குடி) மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.