புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் செயலாளர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். மாநகர பொருளாளர் காஜா மொய்தீன், மண்டல பொறுப்பாளர் நாவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திடீரென பெரியார் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது.
இதையடுத்து, காவல் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். இதையொட்டி, சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மூடி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களும், ஆட்சியர் அலுவலக பணியாளர்களும் சிரமத்துக்குள்ளாகினர். மறியலுக்கு பின்னர் நுழைவு வாயில் திறக்கப்பட்டது.