சேலம் சூரமங்கலத்தில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் விற்பனை மையத்தை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அருகில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர். 
Regional01

தோட்டக்கலைத் துறை சார்பில் சேலத்தில் விதைகள் விற்பனை மையம் தொடக்கம்

செய்திப்பிரிவு

தோட்டக்கலைத் துறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விதைகள், பழக்கன்றுகள், மாடித்தோட்ட தொகுப்பு (கிட்) உள்ளிட்டவைகள் விற்பனை செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கீழ் சேலம் சூரமங்கலத்தில் விற்பனை மையம் திறப்பு விழா நடந்தது.

மையத்தை சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா திறந்து வைத்தார். இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “விற்பனை மையத்தில் சேலம் வட்டார இயற்கை விவசாயிகள், தங்களின் உற்பத்தி பொருட்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்கள் அறிய சேலம் சீலநாயக்கன்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றனர்.

விற்பனை மையத்தில் கிரீன் டீ, காபி தூள், அரசு தோட்டக்கலை பண்ணைகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறி நாற்றுகள், மா, கொய்யா, பாக்கு, தென்னை உள்ளிட்ட மரக் கன்றுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஐந்து வகையான காய்கறி விதைகளை கொண்ட தொகுப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்கள் மற்றும் நெல்லி, எலுமிச்சை, மாதுளை, நாவல் மற்றும் வில்வம் ஆகியவற்றில் தயார் செய்யப்பட்ட மதிப்புகூட்டு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை உரங்களுடன் கூடிய வீட்டு காய்கறி தோட்ட தொகுப்பு (கிட்) மற்றும் தானியங்கி மற்றும் தானியங்கி அல்லாத மாடித் தோட்ட சொட்டு நீர்ப் பாசனக் கருவிகளும் விற்பனைக்கு உள்ளன.

நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் சக்ரவர்த்தி, மீனாட்சி சுந்தரம், யமுனா, ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT