தூத்துக்குடியில் பிரதம மந்திரியின் சுயசார்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 480 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் வழங்க மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுயசார்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் சிறப்பு நுண்கடன் வசதியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்தது.
தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பின் போது, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடையாள அட்டை பெற்ற அனைத்து வியாபாரிகளும் இந்த கடனுதவியை பெற தகுதி பெற்றவர்கள்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 480 தெருவோர வியாபாரிகள் இந்தகடனுதவியை பெற தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டு, நகரில் உள்ள 27 வங்கி கிளைகளுக்கு அவர்களது பெயர்பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டது. முதல் கட்டமாக 364 வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடன் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 16 பேருக்கு கடனுதவிகளை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார். உதவி ஆணையர் து.சந்திரமோகன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முள்ளக்காடு கிளை மேலாளர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.