சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவின் செயலாளர் நீதிபதி ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மாதம் ரூ. ஆயிரம் உதவித் தொகையை தமிழக அரசு வழங்குகிறது. கரோனா தொற்று பரவல் காலத்தில் உதவித் தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, உதவித் தொகையை பெறலாம். அவ்வாறு, பெறவில்லை என்றால், திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகினால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் உதவித் தொகை பெற்றுத் தரப்படும்.
மேலும் உதவித் தொகை மட்டும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம் சார்ந்த அனைத்து உதவிகளை சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலகத்துக்கு நேரில் வர முடியாதவர்கள், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சந்தேகங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அலுவலக தொடர்பு எண் 04175 - 232845 மற்றும் 80568 96649 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.