8 மாதங்களுக்குப் பின்னர் ஏற்காடு ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு ஏரியில் படகு சவாரி கடந்த மார்ச் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, அங்குள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறை பூங்காக்கள் அனைத்தும் கடந்த மாதம் திறக்கப்பட்டன. ஆனால், ஏற்காடு ஏரியில் பயணிகள் படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகளில், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி மாலை முதல் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது, சேலம் மாவட்ட மக்களின் வருகை குறைவாக இருந்தாலும் வெளியூர் பயணிகள் வருகை அதிகம் இருப்பதால் படகு சவாரி களைகட்டியுள்ளது.
படகு துறையில் 4 மோட் டார் படகுகள் உள்ளிட்ட 55 படகுகள் சுற்றுலாத் துறையால் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஏற்காட்டில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் பயணிகளை மகிழ்வித்து வருகிறது.