வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் வள்ளலாரின் கொள்கைகள் பெரும்பாலா னோரால் பின்பற்றப்படுகிறது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி பல இடங் களில் தர்மச் சாலைகள் திறந்து பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. வட லூரில் 1867-ம் ஆண்டு முதல் அணையா அடுப்பு அமைக் கப்பட்டு ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிக்கும் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கருத்துகள் பெற உயர் நிலைக்குழு அமைக்கப்படும் என தமிழக அரசு 2019 ஜூலை 31-ல் அறிவித்தது. ஆனால் இதுவரை உயர்நிலைக்குழு அமைக்க வில்லை. இதை நினைவூட்டி அதிகாரி களுக்கு மனு அனுப்பியும் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, வள்ள லாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பது தொடர்பாக கருத்துரைகளைப் பெற உடனடியாக உயர்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனு தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை ஆணையர், இணை ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.