சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் இருந்து இலவச பேருந்து அட்டைக்கு விண்ணப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது, கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரிடம் கல்வி ஆண்டில் தொடக்கத்தில் இலவச பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பம் பெறப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களிடம் இருந்து இலவச பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பங்களை பெற கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவ, மாணவியர் களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, அந்தந்த மண்டல அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்படைக்க கல்வித் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.