சேலம் மாவட்டத்தின் மழை மறைவு பகுதியாக உள்ள மாவட்டத்தின் கிழக்கு பகுதி பயன் பெறும் வகையில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் சேலம் மாவட்டத்தில் சராசரி மழையளவு 440.60 மிமீ ஆகும். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தம் 597.40 மிமீ மழை பதிவானது. சராசரியை விட கூடுதலாக 156 மிமீ மழை பெய்தது. இருப்பினும் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சார்வாய் ஏரி, ஆறகழுர் ஏரி, தலைவாசல் ஏரி, தியாகனூர் புதூர் ஏரி 30 சதவீதம் மட்டுமே நீர் நிரம்பியுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் சராசரியாக 305 மிமீ மழை பெய்துள்ளது. இதில், அக்டோபரில் 212.50 மிமீ, நவம்பரில் 92.50 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இருப்பினும் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பாததால், விவசாயக் கிணறுகளில் நீர்மட்டமும் உயரவில்லை. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி எப்போதும் மழை மறைவு பிரதேசமாக உள்ளது. இங்குள்ள பல ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்த்தும், நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்தும் காணப்படுகின்றன.
குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் பல ஏரிகளில் மண் மட்டுமே எடுக்கப்படுகிறது. ஏரியின் கரைகள், மதகுகள் கூட சீரமைக்கப்படவில்லை. தடுப்பணைகள் சீரமைக்கப் படவில்லை.
எனவே, கிழக்கு மாவட்டத்தின் வறட்சிக்கு நிரந்தர தீர்வாக, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும், மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆறுகளான வசிஷ்ட நதி, சுவேத நதி மற்றும் ஏரிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.