Regional03

அனைவருக்கும் கொண்டைக் கடலை வழங்கக் கோரி மறியல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள ரேஷன் கடையில், மத்திய அரசின் சார்பில் ரேஷன் கார்டு ஒன்றுக்கு 5 கிலோ கொண்டைக் கடலையும், 1 கிலோ துவரம்பருப்பும் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.

இதற்காக உடையாளூர், மேலத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் ரேஷன் கடை முன்பு குவிந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே கொண்டைக் கடலை வழங்கப்படும் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொண்டைக்கடலை மற்றும் அனைத்து உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பட்டீஸ்வரம் போலீஸார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT