அரசு பள்ளிகளில் பயின்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆயிஷா ஜின்னீரா, சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சர்மிளா, வானரமுட் டியைச் சேர்ந்தசுதா, வைகுண்டத்தைச் சேர்ந்தவேல்மதி ஆகியோருக்கு, இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான்கு மாணவியரையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டினார். மேலும் அவர்களின் படிப்பு செலவுக்காக ஆதவா அறக்கட்டளை மூலம் தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, 69 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், 12 கி.மீ., தொலைவை1.22 மணி நேரத்தில் ஓடி கடந்து சாதனைபடைத்து ஏசியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த தூத்துக்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஆதவா அறக்கட்டளை சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை, சட்ட பட்டதாரிகள் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் தொழில் ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கூட்டணியில் மாற்றம் வரலாம்
அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, “ஊழலின் மொத்த உருவமே திமுக தான். சர்காரிய கமிஷன் விசாரணையின்போது, விசாரணை நடத்திய அதிகாரியே ஆச்சரியப்படும் அளவுக்கு விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி தான் திமுக. இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சி தான்.
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ராசா, கனிமொழி மீது வழக்கை தொடுத்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான். 2ஜி வழக்கில் ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. மக்களிடம் உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.
மக்களின் மதிப்பை பெற்றுள்ளதால் 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சியே மலரும். 2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக பக்கம் வரும் என்றார் அவர்.