உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது என மதுரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை-போடி இடையே 90 கி.மீ. தூரத்துக்கு சுமார் ரூ.450 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை-போடி மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து 2011-ம் ஆண்டு ஜனவரி முதல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அகல ரயில் பாதை அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அடுத்த கட்டமாக உசிலம்பட்டி-போடி வரை 5 பெரிய பாலங்கள், 150 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆண்டிபட்டி கணவாய் மலைப் பகுதியில் 40 முதல் 50 அடி உயரம் இருந்த பாறைகளை தகர்த்து தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா ஊரடங்குக்குப் பிறகு பணி வேகமெடுத்துள்ளது. உசிலம்பட்டி-ஆண்டிபட்டி வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு ஒரு பெரிய பாலம், நூறுக்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், தண்டவாளம் அமைப்பது ஆகிய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
தண்டவாளத்தில் ரயில் ஓடுவதற்கான உறுதித் தன்மை குறித்து பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதிகாரிகளின் இறுதிக் கட்ட ஆய்வைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்.
இதையடுத்து வரும் புத்தாண்டு முதல் மதுரை-ஆண்டிபட்டி இடையே 60 கி.மீ. தூரத்துக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.