புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நேற்று அறிவித்திருந்த நாடு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் 793 பேர் கைது
ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் உள்ளிட்ட 31 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 187 பெண்கள் உட்பட 793 பேர் கைதாகினர். ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
நாமக்கல்லில் 115 பேர் கைது
திருச்செங்கோடு அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் நகரச் செயலாளர் சர்வேயர் செல்வகுமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராயப்பன் முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் வணிகர் நிறுவனத்தினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரியில் மறியல்
இதேபோன்று ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியலில் ஈடுபட்ட 128 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதே போல், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், நடராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று ஒரே நாளில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தருமபுரி திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் தருமபுரியில் 4 முனை சாலை சந்திப்பு அருகே திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராம்நகரில் போராட்டம் நடந்தது.