திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.டி.செல்லச்சாமி(71) நேற்று மாரடைப்பால் இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏ.வாக அதிமுக சார்பில் 1991-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ.டி.செல்லச்சாமி. இவர் பழநி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 2001-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்விடைந்தார். தற்போது ஆண்டிபட்டி கிராம ஊராட்சித் தலைவராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக செல்லச்சாமி நேற்று உயிரிழந்தார். இவரது உடல் தகனம் ஆண்டிபட்டி கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது.
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "செல்லச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்" என கூறியுள்ளார். அதேபோல், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் செல்லச்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.