மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டு இதே நவம்பர் வரை சொத்து வரி 42 சதவீதம் மட்டுமே வசூலானது. ஆனால், கரோனா நெருக்கடியிலும்கூட நடப்பாண்டில் 56 சதவீதம் வரி வசூலாகியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குச் சொத்து, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள், தொழில், குத்தகை ஆகியவற்றின் வரிகள் உட்பட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.201 கோடி வசூலாகும். இதில் அதிகபட்சமாக சொத்து வரி மட்டும் ரூ.110 கோடி வசூலாகும்.
கடந்த ஆண்டு இதே நவம்பர் வரை 42 சதவீதம் மட்டுமே வரி வசூலானது. இந்த ஆண்டு கரோனா பரவலால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு (2020-2021) நவம்பர் மாதம் வரை 56 சதவீதம் வரி வசூலாகியுள்ளது. மீதி 44 சதவீதம் வசூலாக வேண்டி உள்ளது. இன்னும் ஏப்ரல் வரை காலக்கெடு உள்ளதால் 90 சதவீதத்துக்கு மேல் சொத்து வரி வசூலாக வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நெருக்கடியான காலகட்டத்திலும் பொதுமக்கள் சொத்து வரி செலுத்தியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ரூ.50 கோடியே 38 லட்சத்து 85 ஆயிரம் சொத்து வரி நிலுவையில் உள்ள நிலையில், இந்த ஆண்டு சொத்து வரியில் ரூ. 42 கோடியே 98 லட்சத்து 17 ஆயிரம் வசூலிக்க வேண்டி உள்ளது. இதில், கடந்த ஆண்டு நிலுவை சொத்து வரியை வசூலிப்பதுதான் பெரிய போராட்டமாக உள்ளது,’’ என்றனர்.